கள்ளழகர், கூடலழகர், காளமேகப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாண திருவிழா

கள்ளழகர், கூடலழகர், காளமேகப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாண திருவிழா நடந்தது.

Update: 2022-03-18 21:27 GMT
அழகர்கோவில்
கள்ளழகர், கூடலழகர், காளமேகப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாண திருவிழா நடந்தது.
திருக்கல்யாணம்
மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா தனி சிறப்புடையது. இந்த விழா கடந்த 15-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில். நேற்று 4-ம் நாள் விழா நடந்தது. இதில் திருக்கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், பூ மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏகாசனத்தில் அமர்ந்து கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கோலத்தில் பட்டர்களின் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க மங்கல நாண் அணிந்து மணந்தார். திருக்கல்யாணம் முடிந்து மாலைகள் அணியும் நிகழ்வும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் கயிறு பிரசாத பொட்டலங்கள் வழங்கப்பட்டது. 
பின்னர் அதே தீவட்டி பரிவாரங்களுடன் மாலையில் சுவாமி தேவியர்களுடன் புறப்பாடாகிகோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார். இன்று(சனிக்கிழமை) 5-ம் திருநாள் காலையில் திருமஞ்சனமும், மாலையில் மஞ்சள் நீர்சாற்று முறையும் நடைபெறும். இத்துடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி, சத்திரபட்டி போலீசார் செய்திருந்தனர்.
கூடலழகர் கோவில் 
மதுரை நகரின் மைய பகுதியில் மிகப்பழமையான, பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேச ஸ்தலங்களில் ஒன்றாக கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பாடி பெருமையுடைய கூடலழகர் பெருமாள் கோவில் மாசி மாத பிரமோற்சவம், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நிலையில் பங்குனி உத்திரமான நேற்று முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோவிலில் நடந்தது. இதையொட்டி மதுரவல்லித் தாயார் சன்னதியில் சுந்தர்ராஜ பெருமாள், மதுரவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது சுவாமி மங்கல நாணை தேவியர்களுக்கு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளமேகப் பெருமாள்
மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி வழித்துணை பெருமாள், மோகனவல்லி தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்