பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-03-18 21:18 GMT
அரியலூர்:

பங்குனி உத்திர விழா
அரியலூர் நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, வெள்ளாழத் தெரு வழியாக கோவிலுக்கு வந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
தாமரைகுளம், செந்துறை
பங்குனி உத்திரத்தையொட்டி அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் நேற்று காலை முருகனுக்கு 18 வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
செந்துறையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். முன்னதாக சித்தேரி கரையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பழக்காவடி உள்ளிட்டவற்றை வைத்து சக்தி அழைப்பு மேற்கொண்டனர். பின்னர் பக்தி பரவசத்துடன் காவடிகளை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக பாலசுப்ரமணியர் கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து அபிஷேக, ஆராதனை செய்து வழிப்பட்டனர்.
வி.கைகாட்டி
வி.கைகாட்டி அருகே அஸ்தினாபுரத்தில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 23 அடி உயர முருகர் சிலைக்கு அபிஷேம் நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் வி.கைகாட்டி- ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 26-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, கணபதி ஹோம பூஜையுடன் தொடங்கியது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள உப்பு ஓடையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடத்தி பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும், காவடி எடுத்தும் வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியை சுற்றி கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.
மீன்சுருட்டி
மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் இருந்து செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர், காத்தவராயன் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகள், வடக்கு தெரு, மீன்சுருட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம், பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சோழத்தரம், சேத்தியதோப்பு, அணைகரை, திருப்பனந்தாள் மற்றும் மீன்சுருட்டி பகுதியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் - விளந்தையில் வள்ளி, தேவசேனா சமேத அழகு சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர காவடி திருவிழாவா நேற்று காலை தேவதா, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், மகா சங்கல்பம், அர்ச்சனை, தீபாராதனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆண்டிமடம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள காட்டுகேணி குளக்கரையில் இருந்து பக்தர்கள் வேல்காவடி, மயில்காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் பக்தி கோஷங்களுடன் கைலாய வாத்யம், செண்டை மேளம், தமுறு வாத்யம், நாதஸ்வர இசை முழக்கத்துடன் ஆண்டிமடம் நான்கு ரோடு, கடைவீதி, மடத்து தெரு, புதுபிள்ளையார் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர். வள்ளி, தேவசேனா, அழகுசுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்கு, 108 கலச பூஜை நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் இடும்பன், கடம்பன் பூஜை மற்றும் தீபாராதனையுடன் நிறைவுற்றது.
உடையார்பாளையம், தா.பழூர்
உடையார்பாளையம் அருகே வாணத்திரையான் பட்டினம் கிராமத்தில் சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் முருகப்பெருமான் வள்ளி, தேய்வானையுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. வில்லேந்தி வேலவருக்கு ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. மாலையில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. பின்னர் கோவிலில் கல்யாண சுப்பிரமணியருக்கு விடையாற்றி வைபவம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்