வீட்டில் இருந்த ஆசிரியையிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

வீட்டில் இருந்த ஆசிரியையிடம் 9 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-03-18 21:17 GMT
கீழப்பழுவூர்:

ஆசிரியை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சி வண்ணம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி(வயது 47). இவர் அருங்கால் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக ேவலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி முடிந்தபின்னர் அங்கிருந்து வாரணவாசி சமத்துவபுரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்தபோது வெளியில் யாரோ கூப்பிட்டது போல் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது இருசக்கர வாகனத்துடன் நின்ற 2 பேர், வாகனத்தின் சக்கரம் சுற்றவில்லை என்று கூறி, அதனை தட்டுவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி தருமாறு, கேட்டுள்ளனர். இதையடுத்து மலர்விழி இரும்பு கம்பியை எடுத்துக்கொடுத்தார். அதனை கொண்டு வாகனத்தை சரி பார்ப்பது போல் நடித்த அவர்கள், பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.
தாலிச்சங்கிலி பறிப்பு
இதையடுத்து மலர்வழி தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில், 2 பேரில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளான். இதையடுத்து தண்ணீர் கொடுக்க வெளியே வந்த மலர்விழியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை, பின்னால் இருந்த பறித்த அந்த நபர், மலர்விழியை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி சத்தம்போட்டார். இதையடுத்து அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றவர்கள், மர்ம நபர்களை பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது அந்த நபர்களின் வாகனம் சாத்தமங்கலம் அருகே பழுதாகி நின்றது. இதைக்கண்டு அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள், பின்தொடர்ந்து பிடிக்க வந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து பறித்த ஸ்கூட்டரில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வரை சென்றனர். அங்கு ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஆற்று வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து மலர்விழி கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்