கர்நாடகத்தில் 46,660 தேவதாசி பெண்கள் உள்ளனர்; சட்டசபையில் கர்நாடக அரசு தகவல்
கர்நாடகத்தில் 46,660 தேவதாசி பெண்கள் உள்ளனர் என்று சட்டசபையில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஐயோல மகாலிங்ப்பா கேட்ட கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 46 ஆயிரத்து 660 முன்னாள் தேவதாசி பெண்கள் உள்ளனர். அவர்கள் சுயமாக தொழில் செய்து பிழைக்க தலா ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட தேவதாசி பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
அந்த பெண்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சட்ட உதவி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேவதாசி முறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்று அந்த பெண்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த தேவதாசி முறையை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. தேவதாசி முறையை பின்பற்றுவது மற்றும் அதில் ஈடுபடுமாறு தூண்டிவிடுவது குற்றம் ஆகும். இந்த குற்றத்திற்கு சட்டப்படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு ஹாலப்பா ஆச்சார் கூறினார்.