பாலத்தில் வளர்ந்த செடி
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் காலிங்கராயன் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த செடிகள் பெரியதாக வளரும்போது பாலத்தில் விரிசல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவித்ரா. ஈரோடு
வேகத்தடை வேண்டும்
கோபி வட்டம் கலிங்கியம் கிராமம் சின்னக்கவுண்டன்பாளையத்தில் உள்ள ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 3 விபத்துகள் நடந்துள்ளன. மேலும் ரோட்டோரம் குன்னத்தூர்-ஊத்துக்குளி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியும் இன்னும் மூடப்படவில்லை. எனவே சின்னக்கவுண்டன்பாளையத்தில் உள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்கவும், ரோட்டோரம் தோண்டப்பட்ட குழியை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னக்கவுண்டன்பாளையம்.
பழுதடைந்த நிழற்குடை
நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட புதுசூரிபாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் யாரும் பயன்படுத்த முடியாத அளவில் பழுதடைந்து காணப்படுகிறது. பழுதடைந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், புதுசூரிபாளையம்.
பாராட்டு
டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பழைய பால் சொசைட்டி வீதி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சிதறி கிடக்கின்றன. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கொண்டையம்பாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பழைய பால் சொசைட்டி வீதிக்கு சென்று சிதறி கிடந்த குப்பைகளை சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கள்ளிப்பட்டி.