கோஷ்டி மோதலில் அப்பாவி வாலிபர் படுகொலை
சாம்ராஜ்நகர் டவுனில் இருகோஷ்டி இடையே மோதலில் அப்பாவி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளேகால்:
கோஷ்டி மோதல்; வாலிபர் கொலை
சாம்ராஜ்நகர் டவுன் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பகுதியில் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடை அருகே குடிபோதையில் இருகோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் மைசூரு, உதயகிரியை சேர்ந்த பழனி(வயது 30) என்ற வாலிபர் மதுஅருந்த அங்கு வந்துள்ளார். அப்போது இருகோஷ்டிகளில் ஒருவர் வீசிய பெரிய கல் பழனி தலை மீது விழுந்துள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இருகோஷ்டியினரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
4 பேர் கைது
விசாரணையில், இருகோஷ்டி இடையே நடந்த மோதலில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவியான பழனி கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையான பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.