சிவமொக்கா மாவட்டத்தில் முதல்முறையாக அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் மாணவர்கள் சேர நுழைவு தேர்வு; நாளை நடக்கிறது
சிவமொக்கா மாவட்டத்தில் முதல்முறையாக அரசு பள்ளி தங்கும் விடுதியில் மாணவர்கள் சேர நுழைவு தேர்வு 20-ந்தேதி(நாளை) நடக்கிறது என்று கலெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:
அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் சேர...
சிவமொக்கா மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தங்கும் விடுதி உள்ளது. இந்த அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் சேரும் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வசதி படைத்தவர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் சேர்த்து படிக்க வைப்பதாக புகார்கள் வந்தது.
இதனால் சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் தங்கும் விடுதியில் சேர 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்தது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் செல்வமணி தலைமையில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கலெக்டர் நாகேந்திரா ஒன்னாளி, பி.யூ. கல்வி இணை இயக்குனர் நாகராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்து கலெக்டர் செல்வமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாளை நடக்கிறது
சிவமொக்கா மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தங்கும் விடுதிகளில் மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர். இதுவரை இதற்கு நுழைவு தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் சில முறைகேடுகளால் சிவமொக்கா மாவட்டத்தில் முதல்முறையாக அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் சேர நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 20-ந் தேதி(நாளை) சிவமொக்கா மாவட்டத்தில் அரசு பள்ளி தங்கும் விடுதிகளில் மாணவர்கள் சேர நுழைவு தேர்வு நடக்கிறது. இதற்காக 14 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் 4,728 மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்க அனுமதி அளிக்கப்படும். பாடம், பொது அறிவு உள்ளிட்டவைகள் குறித்து கேள்விகள் இருக்கும். தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் செல்போன், புத்தகம் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 14 தேர்வு மையங்களையொட்டி 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.