சத்தியமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

சத்தியமங்கலம் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2022-03-18 20:54 GMT
சத்தியமங்கலம் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விளையாடிக்கொண்டிருந்தான் 
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுடைய மகன்கள் உதய் (5), சந்தோஷ் (2). 
இதில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு சந்தோஷ் விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சந்தோஷ் இல்லாதது கண்டு அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் சந்தோசை தேடினர்.
சாவு 
மேலும் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் அருகே உறவினர்கள் தேடினர். அப்போது அங்குள்ள 3 அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சந்தோஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சந்தோசை தூக்கிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தை அதே பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது,’ தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்