புளியங்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-18 20:51 GMT
புளியங்குடி:
புளியங்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பங்குனி திருவிழா
தென்காசி மாவட்டம் புளியங்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத்தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. பங்குனி உத்திர தேர் திருப்பணி குழு தலைவர் பாலாஜி கிரானைட்ஸ் பி.எஸ்.சங்கரநாராயணன், புளியங்குடி நகராட்சி தலைவி விஜயா சவுந்தரபாண்டியன், கோவில் தக்கார் சாந்தி, அறநிலையத்துறை ஆய்வாளர் லதா, நிர்வாக அதிகாரி கணேஷ் குமார், நகராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருக்கல்யாணம்
தேரை பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து ரத வீதிகளின் வழியாக இழுத்து வந்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து 11 மணியளவில் மீண்டும் நிலையம் வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி புளியங்குடி துணை சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத்லிங்கம், முகமது கனி ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 6 மணிக்கு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீசண்முகர் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. 

உயர்கோபுர மின்விளக்கு
புளியங்குடி பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேரடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென புளியங்குடி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது நகராட்சி தலைவியாக பொறுப்பேற்றுள்ள விஜயா சவுந்தரபாண்டியன் தனது சொந்த செலவில் தேரடியில் புதிய உயர்கோபுர மின்விளக்கு அமைத்துள்ளார்.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி தலைவி விஜயா சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி வரவேற்று பேசினார்.
விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு உயர்கோபுர மின்விளக்கை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் ராஜ்காந்த், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிச்சையா, நகராட்சி கவுன்சிலர்கள் காந்திமதி, உமா மகேஸ்வரி, பொன்னுதுரைச்சி, ரெஜிகலா, பாலசுப்ரமணியன் மற்றும் தி.மு.க. நகர நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்