சான்று பெறாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் சான்று பெறாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-03-18 20:41 GMT
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் சான்று பெறாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு பருவ காலத்தில் சராசரியாக 997.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த மாதம் வரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 665 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிகபட்ச விலைக்கு மாவட்டத்தில் உள்ள 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.
கடும் நடவடிக்கை
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை மாவட்டத்தில் உள்ள 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். மாவட்டத்தில் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) புருஷோத்தமன், துணை இயக்குனர் (தோட்டக்கலை) கணேசன் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 'ட்ரோன்" தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளித்தல் தொடர்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்