10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
விசில் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கருப்பூர்:-
விசில் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
10-ம் வகுப்பு மாணவன்
ஓமலூர் தாலுகா வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் சேலம் அழகாபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் (வயது 15). இவன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான்.
மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்ல பஸ் நிறுத்தத்துக்கு வந்தான். அப்போது சாலையின் மறுபக்கம் நின்ற தனது நண்பன் ஒருவனை சஞ்சய், விசிலடித்து கூப்பிட்டான். இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர் ஒருவர் விசிலடித்தது தொடர்பாக மாணவனை கண்டித்துள்ளார்.
தற்கொலை
மாலை வீட்டுக்கு திரும்பிய சஞ்சய் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.