ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஈரோட்டில் ஹோலி பண்டிகையை வட இந்தியர்கள் வண்ணப்பொடி பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.;

Update: 2022-03-18 20:31 GMT
ஈரோட்டில் ஹோலி பண்டிகையை வட இந்தியர்கள் வண்ணப்பொடி பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஹோலி பண்டிகை
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்று ஹோலி பண்டிகை. இந்த நாளில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வண்ணப்பொடிகளை உடலில் பூசியும், ஒருவருக்கொருவர் மேலே வீசியும் மகிழ்வார்கள். இதனால் வீடுகளும், வீதிகளும் வண்ணமயமாக காட்சி அளிக்கும்.
ஈரோடு மாவட்டத்தில் வாழும் வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஈரோட்டில் கீரக்கார வீதி, மாதவகிருஷ்ணா வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், இந்திராநகர் ஆகிய பகுதியில் ஏராளமான வட இந்திய மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று காலை முதல் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
வண்ணமயம்
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் என்று அனைவரும் வீதிகளில் நின்று, வண்ணப்பொடிகளை மற்றவர்கள் மீது பூசி மகிழ்ந்தனர். இதுபோல் சிறுவர்களும், இளைஞர்களும் வண்ணக்கலவை தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் விளையாடினார்கள். அதனால் அவர்களது உடல் பல வண்ணங்களில் ஜொலித்தது.
மேலும் வட இந்திய மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் பகுதி வழியாக சென்ற மற்றவர்களுக்கும் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ந்தனர். ஹோலி பண்டிகையையொட்டி ஈரோட்டில் வட இந்தியர்கள் வாழும் பகுதிகள் நேற்று பல வண்ணங்களில் மின்னியது.

மேலும் செய்திகள்