அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது செல்லும் என உறுதிப்படுத்தி கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்தும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் லரீப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஹசன் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஆரீப், ஈரோடு மஸ்ஜிதுகள் பேரவை செயலாளர் முகமது ஹனீபா, ஜமாத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளர் ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் பாபு, மாவட்ட செயலாளர் சபீ, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் ஜாபர், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் சாதிக், மாநகர செயலாளர் அம்ஜத்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.