நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி செங்கோல் வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.;

Update: 2022-03-18 20:21 GMT
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி செங்கோல் வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோவில்
பாண்டியர் கால சிவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
4-ம் திருநாளான கடந்த 12-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு 8 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

செங்கோல் வழங்கும் விழா
விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டியராஜா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்- அஸ்திரதேவி தீர்த்தவாரி நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
பின்னர் மேளதாளம் முழங்க கோவில் அர்ச்சகர், செயல் அலுவலர் சுந்தரேசனுக்கு செங்கோல் வழங்கினார். தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலர், ஆயிரம் கால் மண்டபத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்