வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம்

தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-03-18 20:03 GMT
தலைவாசல்:-
தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தேர்த்திருவிழா
தலைவாசல் அருகே வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியசாமி குழந்தை வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தையொட்டி தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காட்டுக்கோட்டை ஊர் கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பூஜை பொருட்களுடன், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தேரின் சக்கரத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். 
தேரோட்டம்
தேரோட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது. தேரோட்டத்தை காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள், தலைவாசல் ஒன்றிய அட்மா குழு தலைவர் சாத்தப்பாடி மணி என்கிற பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க தேரினை வடம்பிடித்து இழுத்தனர். சில பக்தர்கள் பால் காவடி, இளநீர் காவடி எடுத்து, முதுகில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய பகுதிகள் வழியாக சென்ற தேர் 6.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.
அன்னதானம்
தேரோட்டத்தில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்