மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூருக்கு தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை
அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூருக்கு தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரையாக சென்றார்.
மயிலாடுதுறை:
அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூருக்கு தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரையாக சென்றார்.
தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம் மற்றும் ஆயுள் விருத்திக்காக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குவந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இந்த கோவில் குடமுழுக்கையொட்டி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளாகிய சொக்கநாதபெருமானுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை நேற்று மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை தருமபுரத்தில் இருந்து தொடங்கினார்.
தொடர்ந்து விளநகர் துறைக்காட்டும் வள்ளலார் கோவில், செம்பனார்கோவில் ஆகிய கோவில்களில் வழிபாடு செய்துவிட்டு இரவு காளஹஸ்திநாதபுரம் அபிராமி பவனத்தில் சொக்கநாதபெருமானை எழுந்தருளச்செய்து அங்கேயே தங்கினார்.
இன்று திருக்கடையூர் செல்கிறார்
இன்று (சனிக்கிழமை) மாலை அங்கிருந்து புறப்பட்டு இரவு திருக்கடையூருக்கு சொக்கநாதபெருமானுடன் சென்றடைகிறார். அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் 27-ந் தேதி வரை அங்கு சொக்கநாதபெருமானை எருந்தருள செய்து பூஜைகள் செய்கிறார்.
தொடர்ந்து 28-ம் தேதி திருக்கடையூரில் இருந்து புறப்பட்டு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செல்கிறார். பின்னர் 29-ந்தேதி ஆக்கூரில் இருந்து புறப்பட்டு விளநகர் துறைக்காட்டும் வள்ளலார் கோவிலுக்கு சென்றடைகிறார். 30-ந்தேதி விளநகரில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு தருமபுரம் ஆதீன மடத்திற்கு திரும்ப வந்தடைகிறார்.