அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகிய நம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிப்பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் அழகிய நம்பிராயர் பரங்கி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
விழா நாட்களில் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகிய நம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.