திருநகரி கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2022-03-18 19:37 GMT
திருவெண்காடு:
பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
கல்யாண ரங்கநாதப் பெருமாள்
திருவெண்காடு அருகே திருநகரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் பஞ்ச நரசிம்மர் கோவில்களில், இரணிய நரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் இந்த கோவிலில் அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கு திருமங்கை ஆழ்வார் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் பங்குனி  திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தேரோட்டம்
கோவிலில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி திருமங்கை ஆழ்வார் மற்றும் கல்யாண ரங்கநாதப்பெருமாள் மேள தாளம் முழங்கிட நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், தேரோட்டதை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், திருவெண்காடு கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் ஆய்வாளர் மதியழகன், வேடுபரிகமிட்டி செயலாளர் ரகுநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்