தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பெற்றோர்களின் நிதி சுமையை குறைக்கும்- பொதுமக்கள் கருத்து

தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பெற்றோர்களின் நிதி சுமையை குறைக்கும் என கரூர் மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-03-18 19:36 GMT
கரூர்
கரூர்,
வரவேற்கிறோம்
தமிழக பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு அறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
கரூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் கே.எஸ். வெங்கட்ராமன்:-
வணிகர்களுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், விவசாயமும் வணிகமும் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு அதை ஏற்கும் வகையில்
விவசாயம் மேம்பட நிலத்தடி நீர் பெருகுவதற்கும் ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு, டெல்டா கரைமடை பகுதிதூர் வாருவதற்கும், பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கும் ரூ.2,600 கோடி அதிகமாக நிதி ஒதுக்கியதை நாங்கள் வரவேற்கிறோம்.
விவசாயம் வளர்ச்சி அடைந்தால் வணிகம் வளர்ச்சி அடையும் வணிகம் வளர்ச்சி அடையும் போது வணிகர் உடைய வாழ்வாதாரம் பெருகும்.
இன்றைய சூழ்நிலையில் தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளையும் மக்கள் தேடி போகின்ற இந்த தருணத்தில் அதற்கு கூடுதலான நிதி ஒதுக்கி ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதத்தில் கல்வித் துறைக்கு அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை நல திட்டங்களை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
மனதார வரவேற்கிறோம்
கரூர் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் கே.ராஜேந்திரன்:-
தமிழ்நாட்டை 4 ஒலிம்பிக் மண்டலமாக பிரித்து கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்பதையும், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதையும் மனதார வரவேற்கிறோம். உலக செஸ் சாம்பியன் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளதையும் வரவேற்கிறோம். கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லூரிகளிலும் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு திடல், போட்டிகள் நடத்துவதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்தால் மிகச்சிறப்பான முறையில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்து விளையாட்டில் முன்னேற்றம் அடைந்து, ஒலிம்பிக் பதக்கம் பெறும் வகையில் உருவாக்க முடியும்.
கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி திருமலைகொழுந்து:-
தமிழக அரசின் பட்ஜெட்டில் பல நல்ல அறிவிப்புகள் இருந்தாலும் என்னை போன்ற கூலி தொழிலாளர்களின் நலனுக்கும் கூடுதலான கவனம் செலுத்தி இருக்கலாம். கிராம பகுதிகளில் இருந்து அதிகப்படியான கூலி தொழிலாளிகள் நகரத்திற்கு வந்து கூலித்தொழில் செய்து வருகிறோம். குறிப்பாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்கும் கூலி தொழிலாளர்களுக்கு தற்போது அதிகரித்து வரும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிடம் கட்ட பலரும் தயக்கம் காட்டுவதால் சரிவர வேலை கிடைப்பதில்லை. இதற்கு கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அறிவுப்புகள் இல்லாததும், பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் வட இந்தியர்களை அதிகமாக வேலைக்கு எடுப்பதாலும் இங்கு இருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இங்கு இருக்கும் கூலித்தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் அறிவிப்புகளை அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஏமாற்றம்
குளித்தலையை சேர்ந்த குடும்பத்தலைவி பாப்பு:-
தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. இந்தத் தொகை வழங்கப்பட்டிருந்தால் ஏழை எளிய குடும்பத்தாருக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
படிப்பை தொடர நடவடிக்கை
குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்த சூர்யா:-
நான் உக்ரைன் நாட்டில் உள்ள கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தேன். இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடும் போர் நடைபெறுவதால் அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கு வந்து உள்ளேன். இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் அதே கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாணவிகளுக்கு பயன்
வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி களத்தூரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கே.வி.சுவஸ்திகாஸ்ரீ:-
தமிழக அரசின் பட்ஜெட்டில் கல்வித்துறை வளர்ச்சிகென பல நல்ல அறிவிப்புகள் வரவேற்கும் வகையில் உள்ளன. குறிப்பாக 6 வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம், ஐ.ஐ.டி.-ல் சேரும் மாணவ மாணவிகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புகள் என்னை போன்று உயர் கல்வி மற்றும் ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் பெற்றோர்களின் நிதி சுமையை குறைக்கும் வகையிலும் இருக்கும்.
மேலும் புதியதாக அதிக அளவில் வகுப்பறை கட்டிடங்கள் அரசு பள்ளிகளில் கட்டப்படும் என்ற அறிவிப்பு கல்வி கற்பதற்கான அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதாக இருக்கும். இருந்த போதும் வங்கி கடன் மூலம் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்து கடந்த 2 வருடங்களாக கொரோனா காலத்தில் வேலை கிடைக்காமல், பெற்றோருக்கும் சரியான வருமானம் இல்லாமல் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் வாக்குறுதிபடி கல்விகடனை தள்ளுபடி செய்யாதது கல்வி கடன் பெற்று படித்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கும்.
பாராட்டத்தக்க வகையில்...
கரூரை சேர்ந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெரியசாமி:-
தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அறிவித்த அனைத்து கோரிக்கைகளும் தொடர்ந்து நிறைவேற்றி வருவதுடன் வருங்காலத்தில் அரசு ஊழியர்களுக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். கல்விக்காக ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் மாவட்டம்தோறும் புத்தக கண்காட்சி நடத்த அறிவிப்பு மற்றும் பேராசிரியர் அன்பழகன் நினைவாக 25 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள செயல் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்