ரூ.1,000 வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும்
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.;
புதுக்கோட்டை,
கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
தமிழக பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
கறம்பக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரிக்கண்ணு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இல்லம்தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.200 கோடி, பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டம், 15 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளி, பட்டப்படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், நூல் நிலையங்களுக்கு முக்கியத்துவம் என இந்த பட்ஜெட்டில் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி பத்மஸ்ரீ:- 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேல்படிப்பிற்கு செல்லும் மாணவிகளுக்கு அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால் ஏழை மாணவிகள் மேல்படிப்பை தொடருவதற்கு இது ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கிராமப்புற மாணவிகள் மேல்படிப்பை தொடர பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிவிப்பால் அரசு பள்ளிகளில் மாணவியரின் சேர்க்கை அதிகரிக்கும்.
விளையாட்டு வீரர்கள்
உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம்:- ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதற்கும், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. இது விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதுடன் நவீன தொழில் நுட்பம் மூலம் பயிற்சி பெற உதவும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293.26 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையை மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது.
அரசு ஊழியர்கள் ஏமாற்றம்
உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் முனியசாமி:- தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வருங்கால தலைமுறையான மாணவர்களை வளர்த்தெடுக்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்கிறது. இருந்தபொழுதும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல், தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பழைய ஓய்வூதிய திட்டம் அமல், 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலன்களை வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட எதிர்பார்த்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் தான். எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நம்புகிறோம்.
கட்டுமான பொருட்கள்
விராலிமலை வர்த்தகர் கழக ஒருங்கிணைப்பாளர் பூபாலன்:- கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பது மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது வரவேற்கத்தக்கது.
மருத்துவ கல்லூரி மாணவர்கள்
அறந்தாங்கி அருகே துவரடிமனையை சேர்ந்த பிரீத்தி:- உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தேன். கொரோனா தொற்று காரணமாக கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு வந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தேன். கொரோனா தொற்றுக்கு குறைந்த பின் உக்ரைன் சென்று கல்லூரிக்கு சென்றோம். இந்தநிலையில் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மிகுந்த சிரமத்துடன் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். மருத்துவ படிப்பு படிக்க மிகுந்த ஆர்வத்துடன் உக்ரைன் சென்றேன். ஆனால் எங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பது திருப்தியாக இல்லை. மற்ற படிப்பு மாதிரி மருத்துவ படிப்பு இல்லை. அதனால் என்னைப்போல் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி வந்த அனைத்து மாணவர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் இந்தியாவில் அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது உள்ள சூழலில் உக்ரைன் நாட்டில் இயல்பு வாழ்க்கை திருப்பி வந்தாலும் வர்த்தக ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படும். அதுவரையில் எங்களது படிப்பு பாதிக்கும். இந்த பட்ஜெட்டில் உக்ரைனுக்கு சென்று படித்த மாணவர்களுக்கு ஏதாவது அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தோம்.
முதியோர் உதவித்தொகை
பொன்னமராவதியை சேர்ந்த தமிழரசி:- தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அறிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களைப்போல் உள்ள ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தலைவிகளுக்கு உடனடியாக ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்மென தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.