அரசு அலுவலர்களுக்கான ரத்ததான முகாம்

அரசு அலுவலர்களுக்கான ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2022-03-18 19:19 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அவசர சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவிடும் வகையில் அரசு அலுவலர்களுக்கான ரத்ததான முகாம் நடைபெற்றது. அவசர அறுவை சிகிச்சை, அணுக்கள் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக ரத்தம் தேவைப்படும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலருக்கும் பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்த ரத்ததான முகாமில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முதல் நபராக ரத்ததானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள் பலர் தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர்.
 ரத்ததானம் செய்வதற்கு முன்பாக அவர்களுக்கு முறையாக ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே ரத்ததானம் வழங்க அனுமதிக்கப்பட்டனர். மலேரியா, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் உள்ளிட்ட 5 வகையின பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் ஒப்படைக்கப்படும். நேற்றைய முகாமில் 40 பேர் ரத்ததானம் வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பழச்சாறுகளையும் கலெக்டர் வழங்கினார். 
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்