ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் கொள்ளை

கடலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-18 19:15 GMT
கடலூர், 

நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது 26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்தந்த வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். எந்திர பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தன்னுடன் பணிபுரியும் 3 பேருடன், கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக ரூ.9 லட்சத்தை அந்த வங்கியில் பெற்றுக்கொண்டு ஒரு காரில் கே.என்.பேட்டைக்கு வந்தார்.

கண்காணிப்பு கேமரா

அங்கு அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சத்தை நிரப்பி விட்டு புறப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். எந்திர பராமரிப்பு மற்றும் தணிக்கை அதிகாரி சுந்தரராஜன் (35) இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்த போது, அந்த எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக திறக்கக்கூடிய இடத்தில் சாவி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் ஆங்காங்கே பணம் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் எந்திரத்தை திறக்க பயன்படுத்தப்படும் சாவி அங்கேயே இருந்ததால், போலீசாருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் 4 பேரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் கிருஷ்ணகுமார் தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய பிறகு, நள்ளிரவில் அவர் மட்டும் தனியாக வந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தில் இருந்து ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்ததும், அப்போது அவசர கதியில் சாவியை மறந்து எந்திரத்திலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்தை பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை வைத்த நபரே அதனை கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்