கரூர்,
கரூர் நகரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் கஸ்தூரி தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில் வேலுச்சாமிபுரம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சரண் (வயது 25) என்பவரையும், கரூர் ஈரோடு சாலையில் காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த மெக்கானிக் பிரவீன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூர் கடைவீதியில் கஞ்சா விற்கப்படுவதாக பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கீழவெளியூர் கடைவீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்ற மதன்குமார் (31) என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.