2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சை அருகே கைதி தப்பியோடிய விவகாரம் உள்பட இருவேறு சம்பவங்களில் தொடர்புடைய 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.;
நாகப்பட்டினம்:
தஞ்சை அருகே கைதி தப்பியோடிய விவகாரம் உள்பட இருவேறு சம்பவங்களில் தொடர்புடைய 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
கைதி தப்பியோட்டம்
நாகை மாவட்டம் நாகூர் பாலக்காடு வடகுடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன்(வயது 31). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஒரு வழிப்பறி சம்பவம் தொடர்பாக நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேளாங்கண்ணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையில் போலீஸ்காரர்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், ஆயுதப்படை பிரிவு ஏட்டு விஜயகுமார் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து கைதி தனசேகரனை அழைத்து வந்தனர்.
தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியை அடுத்த வளம்பக்குடி என்ற இடத்தில் வந்தபோது இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தினர். அப்போது கைதி தனசேகரன் தப்பியோடி விட்டார்.
4 பேர் பணியிடை நீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
விசாரணைக்கு பின்னர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி வேளாங்கண்ணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, போலீஸ்காரர்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், ஆயுதப்படை பிரிவு ஏட்டு விஜயகுமார் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேற்று உத்தரவிட்டார்.
2 பேர் பணியிடை நீக்கம்
நாகை அருகே உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பருடன் கடந்த 14-ந் தேதி காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தி வந்தான். நாகையை அடுத்து உள்ள தெத்தி அருகே வந்தபோது பின்புறம் அமர்ந்து இருந்த சிறுவன் தவறி விழுந்து சிகிச்சை பலன் இன்றி 16-ந் தேதி பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், ஆயுதப்படை போலீஸ்காரர் பார்த்திபன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
பரபரப்பு
நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 போலீசார் என 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.