ஓசூரில் துணிகரம் தொழில் அதிபர் வீட்டில் ரூ7 லட்சம் கொள்ளை மர்ம நபா்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ7 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.7 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி 2-வது கிராஸ் ஸ்ரீ வசந்தம் நகரை சேர்ந்தவர் சிவபாலசுந்தரம் (வயது 49). தொழில் அதிபரான இவர் பேகேப்பள்ளியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி இரவு ரூ.7 லட்சத்துடன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் தரை தளத்தில் உள்ள பூஜை அறையில் பணத்தை வைத்துவிட்டு, முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனது குடும்பத்துடன் தூங்க சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபாலசுந்தரம் பார்த்த போது பூஜை அறையில் வைத்திருந்த பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டார். அப்போது, நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் தரை தளத்தில் உள்ள கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றதும், முடியாததால் அந்த நபர்கள் அருகில் இருந்த மரத்தில் ஏறி, முதல் தளத்தில் இறங்கி தரை தளத்திற்கு வந்து பூஜை அறையில் இருந்த ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
போலீஸ் வலைவீச்சு
இது குறித்து சிவபாலசுந்தரம் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதே போல், கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.