சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி 45 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி 45 நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
சித்திரை தெப்பத் திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.
இங்கு சித்திரை தெப்பத் திருவிழாவுக்கு முன்னதாக 45 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று தொடங்கியது. இது மே மாதம் 1-ந் தேதி வரை (சித்திரை மாதம் பரணி நட்சத்திரம்) 45 நாட்கள் நடைபெறும்.
நவக்கிர மண்டபம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல்பகுதியில் நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி இருக்க சுற்றிலும் 12 ராசிகளோடு ஒரே கல்லில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே அமைக்கப்பட்டுள்ள மேடையில் உமாமகேஸ்வரர் பங்குனி உத்திரத்தன்று எழுந்தருளி சித்திரை திருவிழா வரை தங்கி பூஜை நடத்துவதாகவும் அதன்மூலம் கிரக நிவர்த்தி பெறுவதாகவும்
ஐதிகம். அதன் அடிப்படையில் நவக்கிரக மண்டபத்தில் 45 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். மே 1-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்று விழா நடைபெறும். தொடர்ந்து மே 9-ந் தேதி தேரோட்டமும், 10-ந் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.