திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அலங்காித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
தேரோட்டம்
தொடர்ந்து கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். மேலும் தேரோட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் திருக்கோவிலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.