பணி மாறுதலாகி சென்ற ஆசிரியரை கண்ணீர் மல்க வழி அனுப்பிய மாணவர்கள்
தியாகதுருகம் அருகே பணி மாறுதலாகி சென்ற ஆசிரியை கண்ணீர் மல்க மாணவர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆங்கில ஆசிரியராக ஆனந்தகண்ணன்(வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பாடம் நடத்தி வந்தார். இதனால் மாணவர்கள் அவர் மீது அதிக பாசம் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஆனந்த கண்ணனுக்கு கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் கிடைத்தது.
இதையடுத்து அவர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பிரியாவிடை கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது மாணவ, மாணவிகள் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்று கூறி தேம்பி, தேம்பி அழுதனர். அப்போது சில ஆசிரியர்களும் கண்கலங்கினர். இதைத்தொடர்ந்து, உங்களை போல மாணவர்கள் அந்த பள்ளியில் உள்ளனர். உங்களுக்கு பாடம் நடத்தியது போல் அங்கு சென்று பாடம் நடத்தப் போகிறேன் என்று கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினார்.
பின்னர் ஆங்கில ஆசிரியர் ஆனந்த கண்ணன் சொல்லி கொடுத்த தன்னம்பிக்கை பாடலை கண்ணீர் மல்க பாடி அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இந்த பாசபோராட்டத்தை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஆங்கில ஆசிரியர் அனந்தகண்ணன் கடந்த 2017- 2018 -ம் ஆண்டு தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது மற்றும் 2021-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.