பட்ஜெட் கருத்து பொதுமக்கள் கருத்து

தமிழக பட்ெஜட் குறித்து குமரியில் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

Update: 2022-03-18 17:32 GMT

வரவேற்கிறோம்

குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ:-

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் விவசாயிகள் வரவேற்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் நில அளவு பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளப்படுவதற்காக நில அளவையர்களுக்கு ரோவர் எனப்படும் கருவி வழங்குவதற்கு ரூ.12 கோடியும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீட்டெடுக்கவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் வரவேற்கிறேன்.

  அதே சமயத்தில் குளங்களை தூர்வாருவதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரவில்லை. மேலும் பேரிடர் மேலாண்மைக்கு வானிலை ஆய்வுக் கருவி உள்பட பல்வேறு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராட்டு

  நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன்:-

  நான் ஒரு வக்கீல் என்ற முறையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை வரவேற்கிறேன். குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்ற சுமார் 10 மாத காலத்தில் பெரிய நிதி சீரமைப்பை செய்திருக்கிறார்கள். சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும்போது மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது பாராட்டுதலுக்குரியது. 10 ஆண்டுகளாக இருந்த நிதிச்சுமையை இந்த அரசு குறைத்துள்ளது. இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கவும் பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. வக்கீல் சங்க தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வக்கீல் என்ற முறையிலும், சமூக சிந்தனையாளர் என்ற முறையிலும் இந்த பட்ஜெட்டை வெகுவாக பாராட்டுகிறேன்.

வேலைவாய்ப்புகள்

  நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்த குடும்பத் தலைவி பிரதீபா (வயது 38):-

  தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான அறிவிப்புகள் நிறைய வந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாவிட்டாலும், நிதி நிலை சீரானதும் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்ததும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த தொகை மூலம் ஏழை, எளிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவிகள் அவர்களின் குறைந்த தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். அதே நேரத்தில் படித்த மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மிகவும் பயனுள்ளதாக...

  நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி மாரியம்மாள் (16):-

  அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கல்லூரியில் படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நான் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் தான் படித்து வருகிறேன். என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனது தாய், தந்தை 2 பேருமே இறந்து விட்டார்கள். எனது பாட்டியின் குறைந்த வருமானத்தில் தான் நானும், எனது அண்ணனும் வளர்ந்து வருகிறோம். எனவே அரசின் அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக இந்த அரசு நிறைய திட்டங்களை கொடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்