375 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோடியக்கரையில் 2-வது முறையாக 375 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் 2-வது முறையாக 375 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சியில் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
ஆலிவ் ரெட்லி ஆமை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை நடுக்கடலில் இருந்து ஆலிவ் ரெட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரைக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம்.
பாதுகாத்து வந்தனர்
அதேபோல் இந்த ஆண்டும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு சென்றது. இதை நாய், நரி, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க ஆமை முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 132 ஆமைகள் இட்டு சென்ற 14 ஆயிரத்து 322 முட்டைகளை வனத்துறையிர் பத்திரமாக எடுத்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்.
கடந்த வாரம் 313 முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
இதை தொடர்ந்து 2-வது முறையாக 375 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கோடியக்கரை கடலில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி சரக ஜ.ஜி. பாலகிருஷ்ணன், நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட வன உயிரின காவலர் யோகேஷ் குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.
நூலகம் திறப்பு விழா
இதேபோல் நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் துறை சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் முன்னிலை வகித்தார். துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணன் வரவேற்றார். விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு நுலகத்தை திறந்து வைத்து பேசுகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் முதன் முறையாக நாகை ஆயுதப்படை மைதானத்தில் தான் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. செல்போன், சமுகவலைதளங்கள் போன்ற தொழில் நுட்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தகம் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் போது உணர்வு பூர்வமான அனுபவங்கள் கிடைக்கும் என்றார். இதில் போலீஸ் துறை உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.