‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட சிவலோகநாதர் கோவில் அருகே உள்ள தேரோடும் வீதி உள்ளது. இங்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில்தான் அரசு ஆஸ்பத்திரி இருப்பதால் இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
சுப்பிரமணியன், கிணத்துக்கடவு
பஸ்கள் நின்று செல்லுமா?
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக பழனி, மதுரைக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ்கள் கோமங்கலத்தில் நிறுத்துவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக கல்லூரி மற்றும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்துக்கு பஸ்கள் கிடைக்காததால் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோமங்கலத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கஸ்பார், பொள்ளாச்சி.
கருகி வரும் செடிகள்
பொள்ளாச்சி ராசக்காபாளையத்தில் இருந்து நெகமம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து முடிந்து ரோட்டின் நடுவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அதில் பல்வேறு வகையான செடிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடும் வெயில் இருப்பதால் அந்த செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் கவனிப்பது இல்லை. இந்த நிலை நீடித்தால் செடிகள் அனைத்துமே கருகிவிடும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கருகிய நிலையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
சரவணன், புளியம்பட்டி.
பஸ் வசதி வேண்டும்
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூர், காரணம்பேட்டை, கரடிவாவி செல்ல போதிய பஸ் வசதி இ்ல்லை. இதனால் இந்த பகுதிகளுக்கு செல்ல பஸ் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பயணிகள் ஆட்டோ அல்லது கார் பிடித்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சரவணன், சோமனூர்.
கனரக வாகனங்களால் அவதி
கோவை குனியமுத்தூர், கோவைப்புதூர் பகுதியில் அனுமதிக்கப்படாத ேநரத்தில் கனரக வாகனங்கள் வருகின்றன. அதுவும் அந்த வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த வாகனங்களில் ஏர் ஹாரன் அடிப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து அனுமதிக்கப்படாத நேரத்தில் கனரக வாகனங்கள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, கோவைப்புதூர்.
பள்ளியில் மது அருந்தும் கும்பல்
கோவையை அடுத்த கண்ணம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் நுழைவு வாயிலில் அமர்ந்து மாலை நேரத்தில் சிலர் மது அருந்துகிறார்கள். அத்துடன் பாட்டிலை அங்கேயே தூக்கி உடைத்து போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பள்ளி முன்பு அமர்ந்து மது அருந்துவதை தடுக்க வேண்டும்.
ஆனந்த், பள்ளபாளையம்.
சாலையில் ஆபத்தான குழி
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் என்.ஜி.ஜி.ஓ.காலனியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே சாலையில் குழி உள்ளது. இந்த ஆபத்தான குழி இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த குழியை மூட வேண்டும்.
ஜெகநாதன் அருள்மொழி, கோவை.
பழுதான எந்திரம்
கோவை கணபதி சங்கனூர் பிரிவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பாஸ் புத்தகம் பதிவு செய்யும் எந்திரம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எந்திரம் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களின் பாஸ் புத்தகத்தை பதிவு செய்ய முடியாமல் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான இந்த எந்திரத்தை சீரமைக்க வேண்டும்.
துரைசாமி, கோவை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை மாநகராட்சி 55 மற்றும் 56-வது வார்டுகளின் எல்லையாக நேதாஜிபுரம் உள்ளது. இங்குள்ள காந்திசிலையில் இருந்து பழைய உப்புத்தண்ணீர் தொட்டி வரை சாக்கடை சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாக்கடை தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
செல்வராஜ், நேதாஜிபுரம்.