குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-18 17:26 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு பூந்தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் போதிய தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் அருகில் உள்ள வார்டுகளுக்கு சென்று குழாய்களில் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். 

சாலை மறியல்

குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் நகரசபை தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், கவுன்சிலர் சந்திரகுமார் மற்றும் விருத்தாசலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினார்கள். அதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 

நிரந்தர தீர்வு

தொடர்ந்து பூந்தோட்டம் பகுதியை ஆய்வு செய்த நகரபை தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்