பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே அரசு பஸ் வராததால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அரசு பஸ் வராததால் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூரில் இருந்து கீழ்வேளூர் வழியாக வலிவலம் செல்லம் அரசு பஸ் கடந்த ஒருவாரமாக இயக்கவில்லை. இந்த பஸ் மூலம் வெண்மணி, காரியமங்கலம், அய்யடிமங்கலம் பகுதியில் இருந்து தினமும் கிள்ளுக்குடி, வலிவலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த அரசு பஸ் ஒரு வாரமாக வராததால் நேற்று காலை கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் உள்ள அய்யடிமங்கலம் கடைத்தெருவில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலிவலம் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.