சமூக வலைத்தளங்களை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அறிவுரை

மாணவிகள் தெரியாத நபர்களுக்கு புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களை கவனமுடன் கையாள வேண்டும் என்றும் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேசினார்.

Update: 2022-03-18 17:22 GMT
நாகர்கோவில், 
மாணவிகள் தெரியாத நபர்களுக்கு புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களை கவனமுடன் கையாள வேண்டும் என்றும் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேசினார். 
மாணவிகளுக்கு விழிப்புணர்வு
குமரி மாவட்ட போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது உள்ள நவீன காலத்தில் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்பங்களை வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில சமூக விரோதிகள் தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்கிறார்கள். இதில் பல ஆயிரக்கணக்காக அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.
சமூக வலைத்தளங்களை கவனமுடன்...
குமரி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்பிற்கு பதில் அளிக்கவே, வங்கி கணக்குகள் மற்றும் பிற ரகசியங்களை பகிரவோ வேண்டாம். 
முகநூல், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுக்கு புகைப்படங்களை பகிராமல் இருப்பது நல்லது. சமூக வலைத்தளங்களை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும். 
புகார் அளிக்க வேண்டும்
இதுதொடர்பாக யாராவது பாதிக்கப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்