டிராக்டர் மீது பஸ் மோதல்; 6 பேர் காயம்
தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது பஸ் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே உள்ள செட்டியந்தல் கிராமத்தில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று கச்சிராயப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிராக்டரை தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் ஓட்டினார்.
திம்மலை தனியார் பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த வஞ்சரவேலு (49), சின்னையன் (28), ஏழுமலை (34), இவரது மகன் விக்னேஷ் (3), சடையன் (64), இவருடைய மனைவி லதா (45) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.