அரசு பணிக்கு வரும் மாணவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்
அரசு பணிக்கு வரும் மாணவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மண்டல லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மண்டல லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
லஞ்சம் வாங்காத...
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அனைத்து துறையிலும் ஜொலிக்கின்றனர். குறிப்பாக அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகள், அதிகம் பேர் அரசு பணியில் சேர்வது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவிகள் படிக்கிற வயதில் கடினமாக படித்து, அரசு பணிக்கு வந்ததும் வாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
அரசு பணிக்கு வரும் மாணவ-மாணவிகள் நேர்மையாகவும். நியாயமாகவும், லஞ்ச வாங்காத அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியில் மாவட்ட தொழிலாளர் நலன் உதவி ஆணையர் ஞானபிரகாசம், முன்னாள் ராணுவ படைவீரர் உதவி இயக்குனர் அருள்மொழி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.