ஈய்யனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு 3-வது பிரசவம் பார்க்க டாக்டர் மறுப்பு

ஈய்யனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு 3-வது பிரசவம் பார்க்க டாக்டர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணை வேறொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2022-03-18 17:11 GMT
கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி சுகந்தி (வயது 27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுகந்தி மீண்டும் கர்ப்பமானார். 

நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக ஈய்யனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், சுகந்தியை பரிசோதனை செய்தனர். 
பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டாக்டர் மற்றும் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். 

ஆண் குழந்தை

தியாகதுருகம் அடுத்த முடியனூர் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சுகந்தி பிரசவ வலியால் துடித்தார். அப்போது ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பி.சரவணன் சுகந்திக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள்

பிரசவத்திற்காக வந்த பெண்ணை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்டபோது, சுகந்திக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது 3-வது குழந்தைக்கு பிரசவம் பார்த்தால் பெண்ணுக்கு அதீத உதிரப்போக்கு ஏற்படும் என்பதாலும், அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் சுகாதார நிலையத்தில் இல்லை என்பதாலும் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஈய்யனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இருப்பினும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்