கிருஷ்ணகிரியில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2022-03-18 17:11 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடை வாடகை, குத்தகை தொகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகள் செலுத்தாதவர்களிடம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் நிலுவை தொகைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையம், பழையபேட்டை, பெங்களூரு ரோடு, சேலம் ரோடு, பழைய சப் ஜெயில் ரோடு, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களுக்கு சென்று வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீசும், நீண்ட காலமாக வாடகை கட்டாத கடைகளை பூட்டியும் சீல் வைத்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், மார்ச் மாத இறுதியில் வரி மற்றும் வாடகை, வீட்டுவரி, சொத்து வரி, குடிநீர் வரி, குத்தகை தொகைகள் முற்றிலும் வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நகராட்சி அலுவலர்களுடன் வரி வசூலில் ஈடுபட்டோம். இதில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத பழைய பஸ் நிலைய கடை உள்பட 3 கடைகளுக்கு சீல் வைத்தும், நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 3 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது. இந்த நடவடிக்கையால் ஒரே நாளில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ரூ.12 லட்சம் நிலுவைத்தொகை வசூலானது. எனவே நகராட்சியில் உள்ள கடை வர்த்தகர்கள், உரிமையாளர்கள் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை உடனடியாக கட்ட வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி பொறியாளர் சரவணன், மேலாளர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் தசரதன், உதவி பொறியாளர்கள் ரவி, அறிவழகன், உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்