காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 56 பேர் காயம்
செதுவாலை, கொட்டாவூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 56 பேர் காயம் அடைந்த
அணைக்கட்டு
செதுவாலை, கொட்டாவூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 56 பேர் காயம் அடைந்தனர்.
காளை விடும் விழா
அணைக்கட்டு தாலுகா செதுவாலை கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு மண்டல துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, செதுவாலை ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணைத்தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் துர்கா முரளிகுமார் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழா தொடங்கியது. 119 காளைகள் போட்டியில் பங்கேற்றன.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது தெருவில் நின்று மாட்டின் மீது கையை போட்டு விசில் அடித்த வாலிபர்களை தூக்கி வீசி எறிந்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். சவுக்கு கட்டைகளை உடைத்துக்கொண்டு வெளியே ஓடிய மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.
விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.55,555, 2-வது பரிசாக ரூ.44,444 என 33 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடின. ஒரு காளை தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டை தாண்டும் போது வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி சென்ற அரசு பஸ் அந்த காளை மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த காளை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.
கொட்டாவூர்
அதேபோல் கொட்டாவூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவுக்கு அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி கருணாநிதி, துணைத்தலைவர் சசிக்குமார் விஜயன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரேமலதா பாபு ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு காலை 11 மணிக்கு விழா தொடங்கியது.
விழாவில் 130 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர். குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.66,666, 2-வது பரிசாக ரூ.55,555, 3-வது பரிசாக ரூ.33,333 என மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன.