நாமக்கல்லில் ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
நாமக்கல் நகராட்சியில் சுமார் ரூ.8 கோடி வரி பாக்கி எதிரொலியாக, நேற்று ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் சுமார் ரூ.8 கோடி வரி பாக்கி எதிரொலியாக, நேற்று ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
வரி பாக்கி
நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை வரி என சுமார் 14 ஆயிரம் இனங்களில் ரூ.8 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பெரும்பாலானோர் வரி செலுத்த முன்வரவில்லை. மேலும் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்திநகர், முருகன் கோவில் பஸ் நிறுத்தம், காதிபோர்டு காலனி, கொண்டிசெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி பொறியாளர் சுகுமார் தலைமையில் மேலாளர் ஜெயகுருநாதன், துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் பிரசாத் அடங்கிய குழுவினர் நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் இடங்களுக்கு சென்று வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
அப்போது வரி பாக்கி செலுத்த முன்வராதவர்களின் வீடு மற்றும் இடங்களில் இருந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி நேற்று ஒரே நாளில் நாமக்கல் நகராட்சியில் பொக்லைன் எந்திரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து நீண்ட காலமாக வரி பாக்கியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் நகராட்சியில் இன்று (நேற்று) ஒரே நாளில் வரி பாக்கியை செலுத்தாதவர்களின் வீடுகள், கடைகள் மற்றும் இடங்களில் இருந்த 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ரூ.3.19 கோடி குடிநீர் வரி, ரூ.2 கோடி சொத்து வரி, ரூ.1.65 கோடி தொழில் வரி, ரூ.1.02 கோடி பாதாள சாக்கடை வரி என நாமக்கல் நகராட்சியில் ரூ.7.96 கோடி வரி பாக்கி உள்ளது. அதன் காரணமாக நீண்ட ஆண்டுகளாக வரி பாக்கி வைத்திருப்பவர்களின் இடங்களில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.