கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் 80 ஆயிரம் மலர் செடிகள் நடவு

கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் கோடைசீசனை ஒட்டி 80 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

Update: 2022-03-18 16:37 GMT
ஊட்டி

கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் கோடைசீசனை ஒட்டி 80 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. 20 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

தோட்டக்கலை பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. இங்கு மலர் அருவி, பிரம்மை பூங்கா, கற்களால் ஆன இருக்கைகள், நடை பாதை ஓரம் அலங்காரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை கவருகிறது. 

பசுமையான புல்வெளியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நர்சரியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். 

மலர் செடிகள் நடவு

இதையொட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர் பாத்திகளில் இயற்கை உரமிட்டு செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

 சால்வியா, டேலியா, பிகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரேனியம், கேலண்டுலா உள்பட 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 80 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

தற்போது களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சக்குலன்ட் என்று அழைக்கப்படும் அழகு தாவர செடிகளின் 20 ரகங்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
பூந்தொட்டிகள்

கோடை சீசனை ஒட்டி 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடப்பட்டு இருக்கிறது. நர்சரியில் ஆர்க்கிட், பிகோனியா, சைக்ளோமன், ரெனன்குலஸ் உள்பட 50-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 20 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். 

கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவுக்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இசை நீரூற்று, தொங்கு பாலம் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்