கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2022-03-18 16:32 GMT
கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

வனப்பகுதியில் காட்டுத்தீ 

மலைமாவட்டமான நீலகிரியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள், கொடிகள் காய்ந்து உள்ளன. 

அதுபோன்று மரங்களில் இருந்து ஏராளமான காய்ந்த சருகுகள் விழுந்து கிடக்கின்றன. இதனால் உடனடியாக காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.மேலும் ஆங்காங்கே அடிக்கடி வனப்பகுதியில் தீப்பிடித்து வருகிறது.  

இந்த நிலையில்  கோத்தகிரியில் இருந்து முள்ளூர் அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.அப்போது காற்றும் வேகமாக வீசியதால் அந்த தீ மளமளவென பரவி வனப்பகுதி மட்டுமின்றி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்திலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

 அத்துடன் இந்த காட்டுத்தீ கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரம் வரை பரவியது. 

மளமளவென பரவியது

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி நிலைய அதிகாரி கருப்பசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

ஆனால் அங்கு காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் அதிகளவில் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. அத்துடன் தீயின் தாக்கமும் அதிகமாக இருந்தது. 

இருந்தபோதிலும் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவிக்கொண்டே இருந்ததாலும் தீயை உடனடி யாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 

போராடி அணைத்தனர்

பின்னர் தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். இதில் வனத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கரில் இருந்த செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்