வனத்துறை சார்பில் தடுப்பணைகளை தூர்வாரும் பணி தொடக்கம்

வனத்துறை சார்பில் தடுப்பணைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-03-18 16:28 GMT
கோத்தகிரி

வனத்துறை சார்பில் தடுப்பணைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 

தூர்வாரும் பணி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வறண்ட சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதுடன், நீர்நிலைகளும் வறண்டு வருகின்றன. 

இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள  கட்டப்பெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணையில் தூர்வாரும் பணி நடந்தது.

அதிகாரிகள் ஆய்வு

ரூ.1¾ லட்சத்தில் இங்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்து தண்ணீர் கசிவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை உதவி வன அதிகாரி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் உதவி வன அதிகாரி சரவணகுமார் கூறியதாவது:- 
இந்த தடுப்பணை அம்பேத்கார் நகரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக அமைந்து உள்ளது. மேலும் வன விலங்குகளின் தாகம் போக்கும் தடுப்பணையாகவும் காணப்படுகிறது.

 எனவே இந்த தடுப்பணையை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதுபோல வனத்துறைக்கு சொந்தமான பல பகுதிகளில் உள்ள தடுப்பணைகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் குடிநீருக்காக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார், வனவர்கள் சசிகுமார் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்