தீக்காயம் அடைந்த இளம்பெண் சாவு- காதலன் எரித்து கொன்றாரா? போலீஸ் விசாரணை

பெங்களூருவில் தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிர் இழந்தாா் அவரை, காதலன் எரித்து கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-03-18 16:17 GMT
பெங்களூரு: பெங்களூருவில் தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிர் இழந்தாா். அவரை, காதலன் எரித்து கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்யாமல் வசித்தனர்

விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் தானேஷ்வரி(வயது 23). இவரது காதலன் சிவக்குமார். என்ஜினீயரான இவர், பெங்களூரு வீரசந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சிவக்குமாரும், தானேஷ்வரியும் ஒரே கல்லூரியில் படித்திருந்தார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தற்போது எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு வீட்டில் சிவக்குமாரும், தானேஷ்வரியும் திருமணம் செய்யாமலேயே வசித்து வந்தனர்.

இந்த நிலையில்  பலத்த தீக்காயத்துடன் தானேஷ்வரியை அரசு ஆஸ்பத்திரியில் சிவக்குமார் அனுமதித்திருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலையில் தானேஷ்வரி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த நிலையில், எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் தானேஷ்வரியின் சகோதரி தேஜஸ்வினி ஒரு புகார் அளித்துள்ளார்.

கொலை என புகார்

அந்த புகாரில் தனது சகோதரி தானேஷ்வரியும், சிவக்குமாரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தானேஷ்வரி சிவக்குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் தானேஷ்வரியை திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே நடந்த பிரச்சினையில் தானேஷ்வரியின் உடலில் பெட்ரோல் ஊற்றி சிவக்குமார் எரித்து கொலை செய்திருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதனால் தானேஷ்வரி தீக்குளித்து தற்கொலை செய்தாரா?, அல்லது சிவக்குமார் அவரை உயிருடன் எரித்து கொலை செய்தாரா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தானேஷ்வரியின் சாவுக்கு சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேஜஸ்வினி கொடுத்த புகாரின் பேரில் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவக்குமாரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்