'பப்ஜி' மதனின் மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து 'பப்ஜி' மதனின் மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-03-18 21:10 IST
சென்னை, 

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடி, அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன் என்பவரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கின் புலன் விசாரணையில், பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகா கொரோனா நிவாரண நிதிக்காக பலரிடம் பெரும் தொகை வசூலித்து இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இருவரின் வங்கிக் கணக்குகளையும் போலீசார் முடக்கம் செய்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உள்ளதாகவும், இது யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்து விட்டதால், மனுதாரர் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்