மந்திரி நவாப் மாலிக்கை ஜாமீனில் எடுக்க ரூ.3 கோடி பிட்காயின் கேட்டு மகனுக்கு மிரட்டல்
சிறையில் இருக்கும் மந்திரி நவாப் மாலிக்கை ஜாமீனில் எடுக்க ரூ.3 கோடி பிட்காயின் கேட்டு அவரது மகனுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
மும்பை,
சிறையில் இருக்கும் மந்திரி நவாப் மாலிக்கை ஜாமீனில் எடுக்க ரூ.3 கோடி பிட்காயின் கேட்டு அவரது மகனுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
சிறையில் மந்திரி
மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியான நவாப் மாலிக் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. தற்போது அவர் ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் மந்திரி நவாப் மாலிக்கின் மகன் அமீர் மும்பை வி.பி. நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு போலீசாரை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார்.
மிரட்டல்
அந்த புகாரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அதில் சிறையில் இருக்கும் தனது தந்தை நவாப் மாலிக்கை ஜாமீனில் எடுக்க ரூ.3 கோடியை பிட்காயின் மூலமாக அனுப்பும்படி மிரட்டல் விடுத்துள்ளார். அந்த ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி போலீசார் இ-மெயில் அனுப்பிய நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.