மீனவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டு தீவுகளில் கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரி நாகர்கோவிலில் மீனவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-18 15:09 GMT
நாகர்கோவில்:
வெளிநாட்டு தீவுகளில் கைதான மீனவர்களை விடுவிக்கக்கோரி நாகர்கோவிலில் மீனவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடலில் வழிதவறி வெளிநாட்டு தீவுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் தலைமை தாங்கினார். மாவட்ட மீன்பிடி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி ஜெலஸ்டின், தமிழ்நாடு மீன்பிடி தேசிய கூட்டமைப்பு நிர்வாகி அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் விசைப்படகுகள் மீன்பிடி நலச்சங்கம், கடலோர உள்ளாட்சி கூட்டமைப்பு, மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு, மாவட்ட தொழிலாளர் சங்கம், தேசிய மீனவர் முன்னேற்ற இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்