கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர காவடி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர காவடி எடுக்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-03-18 15:05 GMT
கொடைக்கானல்:

குறிஞ்சி ஆண்டவர் கோவில்

கொடைக்கானல் நகரில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி எடுக்கும் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அதையொட்டி குறத்திசோலையில் இருந்து தீர்த்தம் எடுத்து நாயுடுபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலை அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதனையடுத்து நேற்று காலை நாயுடுபுரத்தில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பங்குனி உத்திர விழா கமிட்டியின் கவுரவ தலைவரும் முன்னாள் நகரசபை தலைவருமான வி.எஸ்.கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் விழாக்குழு தலைவரும் முன்னாள் நகரசபை துணைத்தலைவருமான எஸ்.ஆர். தங்கராஜ், முன்னாள் நகரசபை தலைவரும் நகர அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஸ்ரீதர், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் விழாக்குழு தலைவர் பி.முரளி, கொடைக்கானல் நகரசபை தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகர தி.மு.க. செயலாளர் முகமது இப்ராகிம் உள்பட பலர் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் விழாக்குழு செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ஆர்.வி.மோகன், எஸ்.வேலுச்சாமி, இளைஞரணி தலைவர் எஸ்.முருகன், ஆர்.ரங்கசாமி, ஏ.வி.ஆறுமுகம், நாகராஜ், மகேந்திரன், வேல்ராஜ், ரோட்டரி சங்க செயலாளர் மதன்கோவிந்தன், சி.எஸ்.பழனி, நகராட்சி கவுன்சிலர்கள் கலாவதி தங்கராஜ், நித்யாசுதாகர், ஜெயசுந்தரம், தேவி செல்வராஜ், நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் ஜான்தாமஸ், துணைச்செயலாளர் ஜாபர்சாதிக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தங்ககவச அலங்காரம்
பின்னர் அங்கிருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு கே.ஆர்.ஆர் கலையரங்கம், ஏரிச்சாலை, 7 ரோடுசந்திப்பு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில், எம்.எம்.தெரு வழியாக குறிஞ்சி ஆண்டவர் கோவிலை அடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதையடுத்து தங்ககவச அலங்காரத்தில் குறிஞ்சி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோடை இன்டர்நேஷனல் ஓட்டல் உரிமையாளர் எஸ்.ஜி.பாண்டுரங்கன் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் முன்னாள் நகர சபை தலைவர்கள் கோவிந்தன், ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காவடி விழாவினை முன்னிட்டு பறவைகாவடி பவனி வருதல் மற்றும் பக்தர்கள் அலகு குத்துதல் போன்றவை நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், நீர் மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர காவடி விழா கமிட்டியினர், கொடைக்கானல் இந்து மகாஜன சங்கத்தினர் மற்றும் நகர, ஒன்றிய இந்து முன்னணியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்