ரேஷன் கடை பூட்டை உடைத்து பருப்பு, சமையல் எண்ணெய் திருட்டு

நாகர்கோவிலில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-18 15:03 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
ரேஷன் கடையில் திருட்டு
நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இங்கு நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஊழியர் விரைந்து வந்து கடையினுள் சென்று பார்த்தார். 
அப்போது, அங்கிருந்த 10 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் 25 கிலோ பருப்பு திருட்டு போனது தெரியவந்தது. இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
மர்ம நபர் கைவரிசை
விசாரணையில், நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடையில் பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்