‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
பள்ளி கட்டிடம் நூலகமாக்கப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை ஊராட்சி கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பல மாதங்களாக பயன்பாடு இன்றி பூட்டிய நிலையில் இருக்கிறது. மேலும் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பள்ளி கட்டிடத்தை நூலகமாக மாற்றவோ அல்லது பகுதி நேர ரேஷன் கடையாக மாற்றவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
குப்பைகள் அள்ளப்படுமா?
கம்பம் நகராட்சி 29-வது வார்டு பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகேசன், கம்பம்.
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
ஆண்டிப்பட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் ஊராட்சி டி.பிள்ளைமுருகம்பட்டி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிரஸ்பாண்டி, டி.பிள்ளைமுருகம்பட்டி.
குப்பை கிடங்கான சாலை
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் மாநகராட்சி அலுவலக சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவை அப்புறப்படுத்தப்படாததால் தற்போது அந்த இடமே குப்பை கிடங்கு போல் மாறி வருகிறது. எனவே சாலையோரத்தில் தேங்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்லத்தீப், திண்டுக்கல்.